தயாசிறி ஜயசேகர தொடர்பாக விரைவில் எடுக்கப்படும் தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழு மீண்டும் கூடும் போது தயாசிறி ஜயசேகர, ஆஜராகவில்லை என்றால் அது சம்பந்தமாக அன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழு எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. இதற்கு முன் தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு தயாசிறி ஜயசேகரவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த குமாரசிறி, எந்த நபரையும் விசாரணைக்கு அழைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு இருப்பதாகவும், அவ்வாறு அழைக்கப்படும் நபர் ஆஜராகவில்லை என்றால் எடுக்க கூடிய நடவடிக்கைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்றம் விசேட தெரிவுக் குழுவை நியமித்தால் அந்த குழு விசாரணைகளுக்காக அழைக்கும் நபர் கட்டாயம் அதில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த தயாசிறி ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஆஜராக போவதில்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.