முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்தால் எங்களின் பாணியை மாற்ற நேரிடும்! எச்.எம்.எம். ஹரிஸ்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சமூர்த்தி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 1100 பயனாளிகளுக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எங்களின் நியாயத்தை மறுத்து அநாவசியமாக முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்தால் எங்களின் பாணியை மாற்ற நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு கையால் தட்டி சத்தம் வராது இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டுமானால் முஸ்லிம்களை சீண்டாமல் எங்களோடு இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன் வாருங்கள்.

இந்த மாவட்டத்தின் எல்லா மத மக்களுக்கும் இந்த உதவி கிடைக்க வழிசமைத்த அமைச்சருக்கு மக்கள் பிரதிநிதியாக என்னுடைய நன்றிகள். இருந்தும் இந்த நாட்டில் இருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

நாட்டில் பல நல்ல திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் வர இருக்கிறது. அதனை சரியாக பயன்படுத்தி எமது பிள்ளைகளை நன்றாக கல்விகற்க வைப்பதன் மூலம் நாம் அரேபிய நாடுகளுக்கு எமது பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்பவேண்டிய நிலை வராது.

சஹ்ரான் எனும் சிறிய குழுவினர் செய்த தாக்குதலின் பின்னராக அண்மைக் காலங்களில் எமது மக்களின் மீது நடக்கும் அநீதிகள் மனவேதனையாக உள்ளது.

ஹபாயா, ஹிஜாப் அணிவதில் எமது பெண்களுக்கு வந்த சிக்கலையும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் போராடி வெற்றி பெற்றோம்.

கண்டியில் எமது அமைச்சர்களில் ஒருவரான றிசாத், முஸ்லிம் ஆளுநர்களையும் குறிவைத்து அத்துரலிய ரத்ன தேரர் இருந்த உண்ணாவிரதம் மூன்று நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

யாழில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தழுதலுத்த குரலில் "தமிழர்களின் தீர்வு திட்டம் மழுங்கடிக்கப்படுகிறது.

அரசாங்கம் ஏமாற்றுவதாக பேசினார்" தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து அவர்களுடன் கைகோர்க்க வேண்டிய உணர்வு முஸ்லிம்களுக்கு இருந்தது.

ஆனால் சிறு பிரச்சினையை தீர்ப்பதற்காக முயற்சித்து தமிழ், முஸ்லிம் உறவில் நீண்ட இடைவெளியுள்ள விரிசலை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers