கோத்தபாயவை சிறையில் அடைத்தால் தேர்தல் வெற்றி இலகு: உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய யோசனை முன்வைக்கும். கோத்தபாய ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருக்கும் போது, அவருக்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.

எம்புல்தெனிய மெக்ரின் ஹொட்டலில் இன்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

சிறையில் இருக்கும் போது தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானது என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து அப்படியான உதவி கிடைத்தால், மிகப் பெரிய உபகாரமாக இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க கூடிய விரிவான கூட்டணியை உருவாக்க வேண்டும். அந்த கூட்டணியில் மைத்திரிபால சிறிசேனவை ஒரு கௌரவமான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கு உதவ தயாராக இருக்கின்றோம்.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிட வேண்டும். மகிந்த ராஜபக்ச பிரதமராக வர வேண்டும். பிவித்துரு ஹெல உறுமய கடந்த நான்கு ஆண்டுகளாக கூறி வரும் இந்த கருத்தை முழு நாடும் தற்போது ஏற்றுக்கொண்டு விட்டது.

எமக்கு எத்தனை அமைச்சு பதவிகள் கிடைக்கும் என்பதை இந்த சந்தர்ப்பதில் கவனத்தில் கொள்ளாது, ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கும் விரிவான கூட்டணியை ஏற்படுத்துவது குறித்தே கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதிக்கு சந்தேகம் ஒன்று ஏற்பட்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினத்தை உயர் நீதிமன்றத்திடம் கேட்க உள்ளதாக பெரிய வதந்தி பரவி வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 30(2) பந்திக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் செய்த நாளில் இருந்தே அவரது பதவிக்காலம் ஆரம்பிக்கும் என 2005ஆம் ஆண்டு அன்றைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்களின் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

தற்போதைய ஜனாதிபதி 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்தார். அன்றைய தினத்தில் இருந்து அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 31 (3) பந்திக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய ஒரு மாதத்திற்கு குறையாத அல்லது இரண்டு மாதத்திற்கு மேற்படாத காலத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். இதற்கு அமைய எதிர்வரும் நவம்பர் 9 மற்றும் டிசம்பர் 9ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers