நாட்டில் இன்று எழுந்துள்ள கேள்வி! இராதாகிருஷ்ணன் வழங்கியுள்ள ஆலோசனை

Report Print Thirumal Thirumal in அரசியல்

தேசிய கட்சிகளுக்கு பாடம் புகட்டிய பெறுமை மலையக மக்கள் முன்னணிக்கே உண்டு என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எனவே எந்தவொரு தேசிய கட்சியும் மலையக மக்கள் முன்னணியை மறந்து செயற்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தலவாக்கலையில் தீயினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நாங்கள் எந்த அரசாங்கத்தோடு இணைந்தாலும் அது மலையக மக்களுக்காக மாத்திரமே. அந்த அடிப்படையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இன்று இந்த அமைப்பின் மூலமாக நாம் பல வெற்றிகளை பெற்று வருகின்றோம். எந்த காரணம் கொண்டும் இந்த முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது.

நாங்கள் எதிர்காலத்திலும் முற்போக்கு கூட்டணி ஊடாகவே தேர்தல்களை சந்திப்போம். இன்று நாட்டில் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லா கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சுதந்திர கட்சியில் ஜனாதிபதியும், மொட்டு கட்சியில் பிரதமரும் வர வேண்டும் என கூறுகின்றார்கள்.

ஆனால் மொட்டு கட்சியோ, எங்கள் கட்சியிலேயே ஜனாதிபதியும், பிரதமரும் வர வேண்டும் என கூறுகின்றார்கள்.

ஐக்கியத் தேசியக் கட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும் வர வேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால் என்னை பொறுத்த வரை ஒரே கட்சியிலிருந்தே ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் இன்று நாங்கள் சந்திக்கின்ற பிரச்சினைக்கு என்றுமே தீர்வு காண முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்யவும் முடியாது.

எனவே ஒரே கட்சியிலிருந்து ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் அது நன்மையாகவே அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் டக்ளஸ் நாணயக்கார, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், பிரதி செயலாளர் அனுஷியா சந்திரசேகரன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers