அரசியல்வாதிகள் சிலர் தமிழரசு கட்சி மீது சேறுபூச முயற்சி! சீ.விகே.சிவஞானம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ் மக்களின் உரிமைகள் ஜனநாயக வழியில் அல்லது சாத்வீக வழியில் தீர்க்கப்பட வேண்டும் என கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஆயுத போராட்டம் மீண்டும் வேண்டும் என்று கூறியது இல்லை என தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சீ.விகே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக இன்று அவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில் கூறப்பட்டதாக கூறி சில விடயங்கள் வெளியே வந்திருக்கின்றது.

குறிப்பாக அரசியல்வாதிகள் சிலர் தமிழரசு கட்சி மீது சேறுபூச முயற்சித்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அந்த கூட்டத்தில் இருந்தவன் என்ற வகையிலும், தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் என்ற வகையிலும், இரா.சம்பந்தன் பேசாத ஒரு விடயத்தை பேசியதாக கூறப்படுவது பொய் என நான் கூற விரும்புகின்றேன்.

அவர் அந்த கூட்டத்தில் ஆயுத போராட்டம் ஒன்று தேவை அல்லது மீண்டும் தமிழர்கள் ஆயுதம் தாங்கி போராட வேண்டும் என கூறியதாக கதைகள் வெளியே சொல்லப்படுகின்றது.

ஆனால் உண்மையில் அவர் அங்கே கூறிய விடயம் வேறு. அதாவது பிரேமதாஸ காலத்தில் அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டது,

சந்திரிக்கா காலத்தில் தீா்வு குறித்து பேசப்பட்டது, மஹிந்த காலத்திலும் பேசப்பட்டது. ஆனால் அதையே இப்போது மறைக்க பார்க்கிறீர்கள், மறக்க பார்க்கிறீர்கள் எனவும், தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் தீர்வு விடயத்தில் காட்டப்பட்ட வேகத்தை எதற்காக இப்போது காட்டவில்லை? எனவும் கேள்வி எழுப்பினாரே தவிர மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டும், மீண்டும் போராட்டம் வரவேண்டும் என கூறவில்லை.

இந்நிலையில் சிலர் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றபடி கற்பிதம் செய்துள்ளனர். அது அநாகரீகமான வேலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.


you may like this video....

Latest Offers