வாழைச்சேனையில் தமிழ்க்கோயிலை உடைத்தது யார்? இரவோடு இரவாக நடந்து வரும் சம்பவங்கள்

Report Print Sujitha Sri in அரசியல்

வாழைச்சேனையில் தமிழ்க்கோயிலை உடைத்ததும், தமிழர்களுக்கான சவக்காலையில் பிரதேச செயலகத்தை கட்டியதும் யார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்க ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கல்முனையின் வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த பேச்சுவாரத்தை நடத்த வேண்டுமென முஸ்லிம் தரப்பு கூறுகிறது. அவர்களுக்கு சார்பான விடயங்கள் வரும்போது பேச்சுவார்த்தை இன்றியும், தமிழ்த் தரப்பு கோரிக்கைகளை முன்வைக்கும் போது பேச்சுவார்த்தை வேண்டும் என்றும் கூறுவது நியாயமாகுமா? என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அவர் பதிலளிக்கையில்,

இது முஸ்லிம் தரப்பினரின் ஒருதலைப்பட்சமான போக்கு என நான் பார்க்கிறேன். தங்களது தேவைக்கு ஏற்ற மாதிரி கதையை புரட்டிப் போடக்கூடாது.

கல்முனை வைத்தியசாலை ஒன்றிருக்கும் போது அதனை அபிவிருத்தி செய்யாது அதற்கு மூன்று கிலோமீற்றர் தூரத்தில் ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்தது யார்?

வாழைச்சேனை மத்திய பிரதேச செயலகத்தை பிரித்தெடுத்தது முன்னாள் அமைச்சர் அப்துல் காதர். நிலத் தொடர்பற்ற முஸ்லிம் கல்வி வலயங்களை உருவாக்கியது யார்?

வாழைச்சேனையில் தமிழ்க்கோயிலை உடைத்ததும், தமிழர்களுக்கான சவக்காலையில் பிரதேச செயலகத்தை கட்டியதும் யார்? அக்கரைப்பற்றில் தமிழர்களின் இரு வட்டாரங்களை அக்கரைப்பற்று மாநகரசபைக்கு அப்பகுதி மக்களின் அனுமதியில்லாது சேர்த்துக் கொண்டது யார்?

இவர்கள் அரசாங்கத்தோடு சேரும் போது ஒரு இலக்கை வைத்தே சேர்ந்தார்கள் என்பது உண்மை. அந்த இலக்கை அடைவதற்கு தமிழர்களை புலிகளாக அரசாங்கத்திற்கு காட்டிக் கொண்டார்கள்.

இது அவர்களுக்கு கிடைத்த பாரிய வாய்ப்பு. இவைகளையெல்லாம் பிரித்தெடுத்தார்கேளே யாரோடும் இது பற்றி கலந்துரையாடினார்களா? சம்மதம் பெற்றார்களா? ஒவ்வொரு விடயமும் இரவோடு இரவாக நடந்தேறும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அமைத்து அதனூடாக தமிழ் மக்கள் அபிவிருத்தியடைய முயற்சிப்பதற்கு முஸ்லிம் மக்கள் குறுக்கே நிற்பது தமிழ் மக்களின் அபிவிருத்தியை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை என தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்து பதிவேற்றம் பெற்றுவிடக்கூடும். இது அவ்வளவு ஆரோக்கியமாகாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers