உரிமைப் போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது

Report Print Theesan in அரசியல்

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு - கொள்ளர் புளியங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எனது நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற வேலைத்திட்டங்களுக்கு வேலை முடிந்ததன் பின்னரும் அதற்கான பணத்தை வழங்காமல் உள்ளதாக அறிகின்றேன்.

அவ்வாறு பணத்தை வழங்க முடியாத நிலையில் தான் இந்த ஐ.தே.க அரசாங்கம் இருக்கின்றது.

ஏனெனில், எந்த செயற்பாட்டையும் அரசியல் ரீதியாக பார்ப்பதே இதற்கு காரணமாக இருக்கின்றது. அதனால் தான் இன்று மக்களுக்கு இவ்வளவு கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நான் நிதி ஒதுக்கியிருந்தாலும் அதனை எடுக்க முடியாதுள்ளது. அதற்கு அமைச்சரொருவர் தடையாக இருந்துள்ளார். இன்று அந்த அமைச்சரே பிரச்சினைக்குள்ளாகியுள்ளார்.

ஆகவே என்னால் ஒதுக்கப்பட்ட நிதிகள் கிடைக்காதப் பட்சத்தில் பிரதேச செயலாளாரிடம் கேளுங்கள்.

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் வேறு எந்த நாடும் எமது நாட்டுக்குள் வருவதை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த கொள்கையை ஜனாதிபதியிடமும் நாங்கள் கூறியிருக்கின்றோம்.

எங்கள் கொள்கையும் எமது கட்சியின் கொள்கையும் இதுவாகவே உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் நாட்டின் மீதான அக்கறையின்மையை வெளிக்காட்டுக்கின்றது.

நாடு எக்கேடு கெட்டுப்போனாலும் உலக நாடுகளின் கொள்கைகளுக்கும், செயற்றிட்டங்களுக்கும், செயற்படுபவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.

அதற்கு நாங்கள் இடம்கொடுக்க முடியாது. அவ்வாறான எந்த ஒப்பந்தத்திற்கு செல்வதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதியும் தெளிவாக அறிவித்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் வல்லரசு நாடுகளின் எடுபிடிகளாக எமது வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதுதான். மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வருகை தந்தமைக்கு வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்படுவதாக அறிகின்றேன்.

அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுமூகமான வாழ்வுக்கு குந்தகமாக அமைந்துவிடும். எனவே, இவ்வாறான செயற்பாடுகளை கட்சிபேதமின்றி எதிர்க்க வேண்டும்.

அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி ஜனாதிபதி ஒரு விடயத்தை கூறியிருந்தார். உண்மையில் அவர் கூறிய விதம் பயங்கரவாத அமைப்புகளுக்கு போதைவஸ்து வியாபாரத்தின் ஊடாக பணம் கிடைத்தது என்பதாகவே இருந்தது.

அந்த அடிப்படையிலேயே இவர்களுக்கும் பணம் கிடைத்ததாக கூறியிருந்தார். அது தவறான அறிக்கை.

தவறான புரிந்துணர்வுடன் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவ்வாறு கூறியிருந்தாலும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இப்பகுதி மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


you may like this video....

Latest Offers