துரோகம் செய்கிறார் மைத்திரி! கடுமையாக சாடும் மாவை

Report Print Jeslin Jeslin in அரசியல்

நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் தவறுகளை இழைத்து துரோகம் செய்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே இன விடுதலைப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள் என ஜனாதிபதி கூறிய கருத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அந்த இயக்கம் தொடர்பில் கருத்து சொல்வதற்கு எந்தவிதமான அடிப்படையோ அல்லது ஆதாரமோ இல்லாமல் இவ்வாறாக வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதற்குப் பின்னர் இதே ஜனாதிபதி தான் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கொள்கைக்காகப் போராடினார்கள் என்றும் அதற்காகவே மக்கள் அவர்களை ஆதரித்தார்கள் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் அப்படி நினைத்து அதைச் சொன்னவர் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஒரு அடி கூட முன்னேறவிடவில்லை.

பின்னர் விடுதலைப் புலிகள் தொடர்பில் அப்படிக் கூறியவர் இப்பொழுது போதைப்பொருள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி கூறியது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers