தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் இணைவு தோல்வி

Report Print Sumi in அரசியல்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் நீதியரசர் சீ.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து செயற்படுவது தொடர்பில் முடிவெடுக்கும் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள், இணைந்து எதிர்கால தேர்தல்களில் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை அண்மைக்காலமாக முருகர் குணசிங்கம் முன்னெடுத்திருந்தார்.

இதனடிப்படையில் இன்றைய தினம், யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சந்திப்பு முன்னதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனை நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் கூட்டணியில் இணைத்துக் கொள்ளக்கூடாது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணியினரும் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை தவிர்த்துக்கொண்டு கூட்டணி அமைப்பதற்கு தம்மால் முன்வரமுடியாது என நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வட்டாரத்தில் இருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உள்ளடக்கப்படும் கூட்டணிக்கு தாம் தயார் இல்லை என பதிலளித்து, இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையையும் இரத்துச் செய்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணிகளான கனகரட்னம் சுகாஸ், விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் காண்டீன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், க.அருந்தவபாலன், பேராசிரியர் வி.சிவநாதன் ஆகியோரும் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers