ஆட்சிக்குழப்பமான 52 நாள் புரட்சி நடைபெற்று 52 நாள் மஹிந்த ராஜபக்ச ஆட்சி புரிந்த போது தான் நீராவியடி பிள்ளையார் கோவிலடியில் பௌத்த கோவில் அமைப்பதற்கு எழுத்து மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஹிந்தா பிரதமர் ஆன போது அவருக்கு கீழ் இருந்த உதவிச் செயலாளர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவிலைச் சுற்றியுள்ள சிங்கள மீனவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அங்கு ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப்படுமாக இருந்தால் அது எந்தவித எதிர்ப்புக்கும் உள்ளாகாது. ஏனெனில் அங்கு கிறிஸ்தவ தமிழ் மக்களும் உள்ளனர்.
கிறிஸ்தவ சிங்கள மக்களும் உள்ளனர். அதைவிடுத்து அந்தப் பகுதியில் எந்தவொரு பௌத்த மதத்தவர்களும் வாழாத நிலையில் பௌத்த பிக்கு மலை ஒன்றை பிடித்து வைத்துக் கொண்டு அதனை தன்னுடைய விகாரை ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
புத்த பெருமானின் பஞ்ச தந்திர கொள்கையை பின்பற்றும் பிக்குவா அல்லது காமேறிகளில் இருந்து வந்தவரா என்பது தான் எனது கேள்வி. அதை இடைநிறுத்துவதற்கு இடையூறாக இருப்பவர்கள் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த சிங்கள அதிகாரிகளும், மகாவலி அதிகாரசபையின் சிங்கள அதிகாரிகளும், அதேபோல் வனவள திணைக்களத்தின் சிங்கள அதிகாரிகளும் ஆவார். இந்த திணைக்களங்கள் எல்லாம் இந்த நாட்டிற்குரியவையா அல்லது சிங்கள ஆதிக்கத்திற்குரியவையா?
அங்கு அந்த பிக்கு எடுக்கும் நடடிவடிக்கைக்கு ஊக்கம் கொடுப்பதற்கும், அவர் சொல்லுவதைக் கேட்பதற்கும் பலர் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்குழப்பமான 52 நாள் புரட்சி நடைபெற்று 52 நாள் மஹிந்த ராஜபக்ச ஆட்சி புரிந்த போது தான் நீராவியடி பிள்ளையார் கோவிலடியில் பௌத்த கோவில் அமைப்பதற்கு எழுத்து மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த பிரதமர் ஆன போது அவருக்கு கீழ் இருந்த உதவிச் செயலாளர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படியானவர்கள் தான் இன்று ஜனாதிபதியாக வர முயல்கிறார்கள் என்றார்.