மைத்திரியின் தீர்மானம் குறித்த முடிவை விரைவில் அறிவியுங்கள்! உச்சநீதிமன்றிக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

மரண தண்டனை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முடிவினை அறிவிப்பதற்கு உச்சநீதிமன்றம் நீண்டகாலத்தை எடுத்துக் கொண்டுள்ளதற்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அத்துடன், மரண தண்டனை நிறைவேற்றல் குறித்த ஜனாதிபதியின் முடிவிற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் அவசர தேவைக்கருதி ஏன் விசாரணை செய்யவில்லை எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“மரண தண்டனை நிறைவேற்றல் தொடர்பான ஜனாதிபதியின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கான தீர்ப்பு அல்லது முடிவினை ஒக்டோபர் இறுதிவரை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் ஏன் இப்படி செய்தது? என்ன காரணத்திற்காக செய்தது? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இந்த முடிவை வழங்கலாம் என்றும் வழங்கக்கூடாது என்றும் பலர் கூறலாம்.

எனினும், இது பிரதான விடயம். ஜனாதிபதியின் முடிவு குறித்த தீர்ப்பை ஒக்டோபர் 30ம் திகதி அதாவது இறுதிவரை ஒத்திவைப்பதானது சரியா? நீதிமன்றின் நீதியான செயற்பாடா இது? அந்தக் காலப்பகுதியானது ஜனாதிபதித் தேர்தலின் ஆரம்பகாலமாகும்.

நீதிமன்றத்திடமிருந்து விரைவான நீதியையே எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் முடிவினை மாகாண சபைத் தேர்தல்களுக்கு வழங்கிய தீர்ப்பைப் போல இந்த முக்கியமான விவகாரத்தை ஒத்திவைப்பது சரியா?

இது முறையல்ல என்பதுதான் எமது நிலைப்பாடாகும். மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைத்தது குறித்த மனுக்கள் மீதான தீர்ப்புக்களையும், மரண தண்டனை நிறைவேற்றல் தீர்மானத்திற்கு எதிரான மனுக்கள் மீதான முடிவினையும் உச்சநீதிமன்றம் விரைவில் வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என அவர் கூறியுள்ளார்.