ஞானசார தேரரின் கருத்துக்கு சீ.வி.கே.சிவஞானம் பதிலடி

Report Print Sumi in அரசியல்

தமிழர்கள் தன்னாட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், எந்த வித எதிர்ப்பையும் காட்ட மாட்டோம் என வடமாகாண முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த தன்னாட்சியை தமிழர்கள் அமைக்க எமக்கு வழிகோழிய பின்னர், சிங்களவர்கள் ஏனைய பிரதேசங்களை தனிச் சிங்கள தேசமாக மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் கடந்த 07ஆம் திகதி இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சிங்கள ஆட்சி அமைப்போம் தமிழர்கள் கோபிக்க வேண்டாமென கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

ஞானசாரரின் கருத்தை மறுதலிக்க வேண்டிய தேவை இல்லை. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானிய அரசு ஒப்பந்தம் செய்த போது, இருந்தவன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் என்ற ஒரு கண்டிச் சாமி எனும் தமிழில் கையொப்பமிட்ட ஒரு அரசன். அதனாலே தானோ, அதற்குரிய கருத்தையும், ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எம்மைப் பொறுத்தவரையிலும், எமது அரசியல் நீண்டகாலமாக உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த தாயகம் தொடர்பாகவே இருந்திருக்கின்றது.

தெற்கை சிங்கள தேசம் என்று தான் பேசியிருக்கின்றோம். தெற்கு சிங்கள தேசமாக இருப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவ்வாறு ஞானசார தேரர் குறிப்பிட்ட வகையில் இலங்கை சிங்கள தேசமாக இருக்க வேண்டுமானால் அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால், அவரே எமக்கு இப்போது ஒரு உதவியைச் செய்யலாம். ஒரு சமாதான சூழ்நிலையை உருவாக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

எங்களுடைய தமிழ் தாயகத்தை இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலமாக இணைந்த எமது பிரதேசத்தை வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்களின் தாயகம் என பேசப்படும் வடக்கு மற்றும் கிழக்கை எங்களுக்குள் ஒரு சுயாதீனமான கூட்டாட்சி, சுயாட்சி இணைப்பை உருவாக்கி இணைந்த இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனி தன்னாட்சியை ஏற்படுத்தி அது எமது தமிழ் மக்களின் பிரதேசமாக இருந்துக் கொண்டு ஏனைய பிரதேசங்களில் சிங்களவர்களாக இருப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை.

அவ்வாறு தான் எமது அரசியலில் இருந்துள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வை எட்டக்கூடிய வாய்ப்பை ஞானசார தேரர் உருவாக்கியுள்ளார் என நினைக்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் தன்னாச்சிக்கான பகுதியை விட்டு, ஏனைய பகுதிகளை தெற்கத்திய சிங்கள நாடாக வைத்திருக்கலாம்.

அவ்வாறு வைத்திருப்பதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எமது கோரிக்கைகளை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.