அமைச்சு பதவியை விட நாடு முக்கியம்: ரிசாட் பதியூதீன்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் பதவியை விட தனக்கு நாடு முக்கியம் எனவும் நாட்டில் அமைதியையும், சகவாழ்வை ஏற்படுத்தவும் தற்போது அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் சகவாழ்வும், அமைதியும் நிலவ வேண்டும். இதற்காகவே நாங்கள் அனைவரும் அமைச்சு பதவிகளில் இருந்து விலகினோம்.

அமைச்சு பதவிகளை விட நாடு எமக்கு முக்கியமானது. அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போதே சிலர் அதனை மீறி செயற்பட்டு வருகின்றனர். சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சட்டத்தை சரியாக அமுல்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்துடன் சம்பந்தமானவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அப்பாவி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். நாட்டில் சகவாழ்வையும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் தமது பணிகளை அதேபோல் செய்து வருகின்றனர்.

இவர்கள் பற்றி நாட்டில் எவரும் பேசுவதில்லை எனவும் றிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.