கொட்டகலை பிரதேச சபைக்கு கறுப்பு பட்டி அணிந்து சென்ற இ.தொ.கா உறுப்பினர்கள்

Report Print Thirumal Thirumal in அரசியல்

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியால், மானிய அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 50 ரூபா பெற்று கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட 50 ரூபாவினை காலம் தாழ்த்தாது உடனடியாக பெற்று கொடுப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் மற்றும் இ. தொ. கா. உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபைக்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தோட்ட தொழிலாளர்களுக்கு எமது தலைவரினால் பெற்று கொடுக்கபட்ட சம்பளம் போதாது என கூறி நாள் ஒன்றுக்கு 50 ரூபாவினை பெற்று தருவதாக கூறியவர்கள், இதுவரையிலும் பெற்று கொடுக்கவில்லை.

எனவே வாக்குறுதி வழங்கியவாறு பெற்று கொடுக்க வேண்டும் என சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டதில் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இ.தொ.கா. ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தது உண்மை. ஆனால் இறுதியில் 750 ரூபாவினை பெற்று கொடுத்துள்ளதாக இ.தொ.கா. உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை தமது தலைவர் கூறியபடி வெகுவிரைவில் 50 ரூபாவினை அமைச்சர் திகாம்பரம் பெற்று கொடுப்பார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.