அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் தீர்மானம்! தீர்க்கமான முடிவினை கூடி எடுப்போம்: சிறிநேசன்

Report Print Rusath in அரசியல்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நாங்கள் கடந்த கால படிப்பினைகளைக் கொண்டு அரசுக்கு எவ்வாறான நிபந்தனைகளை கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் குறுமண்வெளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் ம.இளங்கோவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கப்பெரலிய திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட 29 இலட்சம் ரூபா நிதியில் வீதி, பொது மைதான பார்வையாளர் அரங்கு, ஆலய சுற்றுமதில் போன்ற அபிவிருத்தி திட்டங்களை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் திங்கட்கிழமை மாலை (08) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எங்களது அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்தமட்டில் பல்வேறுபட்ட முடிவுகள் நடைபெறப்போகின்றது. அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் இடம்பெற இருக்கின்றது. அந்த இடத்தில் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எவ்வாறான நிபந்தனைகளை நாங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டும். என்பது சம்பந்தமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி அதன்போது முடிவுகளை எடுத்து செயற்பட இருக்கின்றோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடந்த கால படிப்பினைகளைக் வைத்துக்கொண்டுதான் எங்களது முடிவுகள் அமையும் என்பதனை நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோன்ற மக்கள் முக்கியமாக ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும், எமது அரசியலை பல்வேறுபட்டவர்கள் பல்வேறு கருத்துக்களை ஆங்காங்கே தெளித்துக் கொண்டு இருக்கின்றார்கள் அல்லது அள்ளி வீசிக்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் எப்போதும் நியாயமான செயற்பாடுகளுக்கு அப்பால் அநியாயமான செய்பாடுகளுக்கு துணைபோனதில்லை. துணைபோகப் போவதுமில்லை.

நாங்கள் எவரையும் கடத்தவும் இல்லை கப்பம் கோரவும் இல்லை. கற்பழிக்கவுமில்லை காணாமல் ஆக்கவுமில்லை பலதரப்பட்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்கள் என எவரையும் கொலை செய்யவுமில்லை கொள்ளையடிக்கவும் இல்லை. எமக்கு கிடைக்கப்பெற்ற நிதிகள் முழுமையாக அபிவிருத்திக்கு செலுத்தப்படுகின்றது என நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எங்களுடன் எங்களது கொள்கையுடன் இணைந்து சரியாக நடந்து கொள்ள முடியாதவர்கள் எங்களிடம் இருந்து உதிர்ந்து பொருத்தமானவர்களிடம் சேர்கின்றனர். இந்த விடயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இந்த ஏமாற்று காரர் மத்தியிலே மக்கள் ஏமாந்து விடாது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

இதுவரை எங்களுக்கு எழுபது கோடி ரூபாய் நிதியானது கிடைக்கப்பெற்றுள்ளது. இன்னும் நிதியானது கிடைக்க இருக்கின்றது. வருகின்ற நிதியினை நாங்கள் சகல பிரதேசங்களுக்கும் சமமான முறையில் பகிர்ந்தளித்து வருகின்றேன். இருந்தும் அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு கூடுதலான நிதியினை நாங்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது குறைவாக காணப்பட்டாலும் நன்றி உணர்வோடு இவ்வாறே வரவேற்பு நிகழ்வுகளை நடாத்துவதற்கு உங்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.