தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் கூட்டமைப்பு!

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்வாக்கை இழந்து வருவதை உணர்ந்துகொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்ன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு இனப்படுகொலை உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்த கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“தமிழ் மக்களுக்கு இராணுவமே பாதுகாப்பை வழங்கி வருகின்றது. இறுதிப்போர் இடம்பெற்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பிலேயே தங்கியிருந்தனர்.

இனப்படுகொலை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதிப்போர் இடம்பெற்றுமுடிந்த பின்னரே கொழும்பிலிருந்து வடக்கு கிழக்கிற்கு திரும்பியிருந்தனர்.

தமிழ் மக்களை இராணுவம் பாதுகாத்தது. தமிழ் மக்கள் இராணுவத்தை நேசிக்கின்றனர். அதேபோல வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவம் இருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புகின்றனர்.

இதனிடையே மக்களிடமிருந்து பிரிந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் தமிழ் மக்களைப் பற்றி பேசுகின்றார். அதற்கு சிறந்த ஓர் உதாரணம்தான் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் உதவியும் வழங்காத கூட்டமைப்பு அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக மாறிவருவதாகும்.

தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவே இராணுவம் செயற்படுகிறது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடினார்கள். எந்த நேரத்திலும் தமிழ் மக்களை இலக்குவைத்து இராணுவம் போர்செய்யவில்லை. போரில் ஈடுபட்ட தரப்பினருடன் மாத்திரமே இராணுவம் போர் செய்தது.

எனினும் பாதுகாப்பு வழங்கி பசில் ராஜபக்ச வடக்கு கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி செய்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பில்தான் இருந்தனர். போர் முடிந்த பின்னர்தான் அவர்கள் அங்கு திரும்பினர்.

இன்று தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இனப்படுகொலையை இராணுவம் அரங்கேற்றியதாக கூறிவருகின்றனர். இருந்த போதிலும் கடந்த காலங்களில் இராணுவம் வழங்கிய பாதுகாப்பை மக்கள் அறிவார்கள்.

இதனை அறிந்த விக்னேஸ்வரன், தெற்கில் தமிழ்த் தலைமைகள் அரசாங்கத்துடன் கைகோர்த்த நிலையிலேயே எதிர் கூட்டணியை அமைத்திருப்பதாகக் கூறுகின்றார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.