நாட்டு மக்கள் தொடர்பான பொறுப்புகளை வகிக்கும் தகுதி அரசாங்கத்திற்கு கிடையாது

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டு மக்கள் தொடர்பான பொறுப்புகளை வகிக்கும் தகுதி இந்த அரசாங்கத்திற்கு கிடையாது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க முடியாத அரசாங்கத்தினால் மக்கள் குறித்த பொறுப்புக்களை வகிக்க முடியாது.

இவ்வாறான ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கும் அனுப்பி வைக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு உண்டு.

இதேவேளை பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அணியினர் மற்றும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தால், அரசாங்கத்தை நாளைய தினம் மாலை தோற்கடிக்க முடியும்.

அரசாங்கத்திடம் 106 நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர்.

எதிர்க்கட்சியில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மகிந்த ராஜபக்சவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால், அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்.

அரசியல் விளையாட்டு அல்லது உள்நோக்கங்கள் இல்லை என்றால், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற முடியும். கொழும்பில் தாக்குதல் நடத்தப்பட உள்ளது, கொழும்பில் இருந்து வெளியேறுங்கள் என்று பாதுகாப்பு பிரிவினர் கூறியதும், பிரதமர் கொழும்பில் இருந்து வெளியேறினார்.

தமது நகரத்தை பாதுகாக்க முடியாத பிரதமர், எப்படி மக்களை பாதுகாப்பார். மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் எமது பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரிகளை வைத்துக்கொள்வதில்லை.

மக்களிடம் செல்ல நாங்கள் பயமில்லை. கதவை திறக்கவும் பைகளை தூக்கிக்கொண்டு வரவும் எமக்கு பாதுகாப்பு தரப்பினர் தேவையில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers