பாராட்டுக்களைப் பெறும் சுமந்திரனின் கருத்து!

Report Print Rakesh in அரசியல்

முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க அனுமதிக்க முடியாது. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் அவை முஸ்லிம் சமூகத்தினரின் முழுமையான இணக்காப்பாட்டுடனே இடம்பெற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"அண்மைய ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் இனவாதக் கருத்துக்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தைப் பயங்கரவாதத் தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தி சிங்கள - பௌத்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் குற்றம்சாட்டியிருந்தனர். இஸ்லாமிய மார்க்க விடயங்களில் நேரடியாகப் பிழை கண்டனர்.

அன்றாட மார்க்கக் கடமைகளில் சந்தேகத்தை ஏற்படுத்தி மக்களின் மனங்களைக் காயப்படுத்தினர். இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்து முஸ்லிம் சமூகத்ததுக்கு ஆறுதலளிக்கின்றது. இதனை நாம் பாராட்டுகின்றோம்.

முஸ்லிம் சமூகம் சுமந்திரன் போன்ற தலைமைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் வீண்போகவில்லை என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது.

முஸ்லிம் சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராக மற்றொரு சிறுபான்மை சமூகத் தலைவர்கள் குரல் கொடுப்பது எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து பயணிக்க சிறந்த வாய்ப்புக்களைக் கொடுக்கும் எனவும் நம்புகின்றோம்" என்றுள்ளது.

Latest Offers