அமெரிக்காவுடன் புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவில்லை: ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவுடன் சோபா மற்றும் எக்ஸா உடன்படிக்கைகளில் கையெழுத்திட தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினர், பல கதைகளை கூறி வருவதாகவும் சோபா என்ற பெயரில் புதிய உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுர குமார திஸாநாயக்க மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய பிரதமர்,

அனுரகுமார திஸாநாயக்க, பந்துல குணவர்தன ஆகியோர் கேள்விகளை எழுப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கேள்வி எழுப்ப அனுரகுமார திஸாநாயக்க மாத்திரமே வந்துள்ளார். நான் பதிலளிக்கின்றேன். பந்துல குணவர்தன வேறு சோபாவில் அமர்ந்திருக்கின்றாரோ தெரியவில்லை. எனினும் இலங்கை கையெழுத்திட்டுள்ள சோபா உடன்படிக்கை பற்றி கூறுகின்றேன்.

சோபா உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறேன்.1995 ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகமும், வெளிவிவகார அமைச்சு கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்ட ஆவணங்களை நான் சபையில் சமர்பிக்கின்றேன். என்னிடம் பழைய உடன்படிக்கையே உள்ளது.

வேறு உடன்படிக்கை என்னிடம் இல்லை. சபையில் சமர்பிக்குமாறு கோரியதால், நான் அதனை சபையில் சமர்பித்தேன். அந்த காலத்தில் இருந்து இந்த உடன்படிக்கை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அப்போது யாரும் எதிர்க்கவில்லை. வேறு சோபா உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திடவில்லை.

சோபா என்பது Status of forces agreement என்ற உடன்படிக்கையாகும். இது 1995 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பரிமாறிக்கொண்ட உடன்படிக்கை. இதற்கு அமைய தற்போதும் அமெரிக்க படையினருக்கு ராஜதந்திர சிறப்புரிமைகள் உள்ளன. அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் சிவில் ஊழியர்களுக்கும் அந்த சிறப்புரிமை இருக்கின்றது.

இதற்கு பின்னர், மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அமெரிக்காவுடன் மற்றுமொரு பாதுகாப்பு உடன்படிக்கையை செய்துக்கொண்டது.Acquisition and cross Servicing Agreement என்ற எக்ஸா உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை 2007 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. அது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி கலாவதியானது. இதனையடுத்து 2017 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு மீண்டும் உடன்படிக்கையை புதுப்பித்தது. அந்த உடன்படிக்கையை நான் சபையில் சமர்பிக்கின்றேன் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers