தற்போதைய பிரதம நீதியரசரையும் கைது செய்ய வேண்டும்: மாஹல்கந்த சுதன்த தேரர்

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதம நீதியரசராக பதவி வகித்து வரும் ஜயந்த ஜயசூரியவை கைது செய்ய வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாஹல்கந்த சுதன்த தேரர் கோரியுள்ளார்.

நேற்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சென்றிருந்த போது அவர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த காலப் பகுதியில் சட்ட மா அதிபராக கடமையாற்றிய ஜயந்த ஜயசூரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சஹ்ரான் தொடர்பில் 300 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்று கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதனைப் போன்றே அப்போதைய சட்ட மா அதிபரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்ட மா அதிபர் உரிய ஆலோசனைகளை வழங்கத் தவறியிருந்தால் அவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு 2019ஆம் ஆண்டில் தகவல் தெரிந்த போதிலும் தற்போதைய பிரதம நீதியரசருக்கு இது பற்றி 2017ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers