கைகொடுக்குமா கூட்டமைப்பு? தப்புமா நல்லாட்சி அரசாங்கம்?

Report Print Rakesh in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை 6.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியுள்ளது.

இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இரண்டாம் நாள் விவாதம் ஆரம்பமானது.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குப் பொது எதிரணியின் எம்.பிக்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்களும் தீர்மானித்துள்ளனர்.

பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இன்று காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது என்ன தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவரவில்லை. பெரும்பாலும் பிரேரணைக்கு எதிராக - அரசுக்குச் சார்பான முடிவையே கூட்டமைப்பு எடுத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும், அதன் பங்காளிக் கட்சிகளும் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிக்கவுள்ளனர்.

Latest Offers