அரசாங்கத்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளில்! மனம் திறந்தார் மஹிந்த

Report Print Rakesh in அரசியல்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று வாக்களித்தால் தான் வெற்றி கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. அதேவேளை, சாதாரண பெரும்பான்மையான 113 ஆசனங்கள்கூட இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தான் இந்த அரசைப் பாதுகாத்து வருகின்றார்கள் என்பது நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று இந்த அரசிலுள்ள அனைவரும் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், எவரும் அவ்வாறு செய்யவில்லை.

முஸ்லிம் அமைச்சர்கள் மாத்திரம் தான் பதவி விலகினார்கள். அவர்கள் வேறு நோக்கத்துடன் தான் பதவி விலகினார்கள். அவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர் மீண்டும் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

ஏனையவர்களும் பதவிகளை மீளவும் பொறுப்பேற்க முயற்சிக்கின்றார்கள். எனவே, சுயநலம் கருதிச் செயற்படும் அரசிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து அரசைக் காப்பாற்ற முயல்வார்கள்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

ஏனெனில், கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

உண்மையில் நாட்டின் நலனில் அக்கறை இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும்.

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால் தான் வெற்றி கிடைக்கும், அரசும் கவிழும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers