வடக்கு, கிழக்கிலும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள புதிய தேசிய கூட்டணி

Report Print Thirumal Thirumal in அரசியல்

தமிழ் மக்களின் நலன்கருதியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும், இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்கலாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணியை அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான கூட்டணியே தவிர தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதொன்றல்ல.

ஆரம்பகட்டமாகவே இன்று சில கட்சிகள் இணைந்தன. எதிர்காலத்தில் வடக்கிலும், கிழக்கிலும் மேலும் பலர் இணையக்கூடும். மலையகம் மட்டுமல்ல வடக்கு, கிழக்கிலும் அரசியல் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி இருக்கின்றது. அக்கூட்டணி போல் நாம் விளம்பர அரசியலை நடத்த விரும்பவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையுடன் 50 ரூபாவை பெற்றுக்கொடுத்தால் மட்டுமே அது சிறப்பாக அமையும். இல்லாவிட்டால் முற்போக்கு கூட்டணிக்கு பாரிய தோல்வியாக அது அமையும்.

அதேவேளை, தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு யார் முன்வருகின்றார்களோ அவர்களுக்கு எமது முழு ஆதரவும் ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.