மொட்டுக் கட்சியுடன் நடக்கும் பேச்சு தோல்வியடைந்தால், புதிய கூட்டணி: மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய கூட்டணியை உருவாக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியிலோ அல்லது பொதுஜன பெரமுனவிலோ இணைய மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் மட்டுமல்லாது, மக்கள் விடுதலை முன்னணி, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவுடன் இது சம்பந்தமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளோம்.

இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து, இருதரப்பும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள முதல் முறை அல்லது இரண்டாவது முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள், அவர்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கடமை எனக் கூறியுள்ளனர். எமது கட்சியின் கடமை என்னவென்று அவர்கள் சொல்லித் தரத் தேவையில்லை.

நாட்டின் தேவைக்கு அமையவே கட்சி என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்படும். மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக புரிதலோடு செயற்படுவதால், தொடர்ந்தும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களுடன் ஒரு இணக்கத்திற்கு வர முடியவில்லை என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூடிவிடவோ, அதன் அடையாளத்தை இழக்கவோ முடியாது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers