மருத்துவர் ஷாபியை விடுதலை செய்ய தாய்மார்களை பரிசோதிக்க முடியாது: அத்துரலியே ரதன தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்தீன் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள தாய்மார்களை பரிசோதனை செய்ய இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

குருணாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்தீன் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள தாய்மார்களை மருத்துவ விஞ்ஞான முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தினால், மருத்துவர் ஷாபி குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்படுவார் என்பதால், அந்த தாய்மார்களை பரிசோதனை செய்ய இடமளிக்க முடியாது.

மருத்துவர் ஷாபியை விடுதலை செய்யும் நோக்கிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் மருத்துவ விஞ்ஞான முறையில் பெலோப்பியன் குழாயை பரிசோதனை செய்ய போகிறது.

மருத்துவ விஞ்ஞான முறையிலான பரிசோதனைக்கு பதிலாக மருத்துவர் ஷாபி, சிங்கள தாய்மாருக்கு சத்திர சிகிச்சை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட முஸ்லிம் தாய்மாருக்கு சத்திர சிகிச்சை செய்ய எடுக்கும் நேரம் அதிகமானது, சிங்கள தாய்மாருக்கு ஒரு தையல் போடுவது, முஸ்லிம் தாய்மாருக்கு இரண்டு தையல் போடுவது போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனம் செலுத்தி அவரை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரியே நான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன்.

எனினும் ஜனாதிபதி அந்த ஆணைக்குழுவை இன்னும் நியமிக்கவில்லை எனவும் அத்துரலியே ரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.