தனது நாடாளுமன்ற உரையில் ஜனாதிபதி எனக் கூறினால், அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்பதால், அவரை “வென்ட மெண்டேலா” அதாவது காலியாக போகும் மெண்டேலா என விளித்து உரையாற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சரியானது. எனினும் அதில் பிரதமர், அமைச்சரவையை மட்டுமல்லாது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வந்தால், அதற்கு தேவையான 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நான் பெற்றுக்கொடுப்பேன்.
மகிந்த ராஜபக்ச தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவார் என மைத்திரிபால சிறிசேன ஓரிடத்தில் கூறியுள்ளார். அப்படி வழங்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் பரிதாப நிலைமையே ஏற்படும்.
நான்கு வருடங்கள் பின்நோக்கி செல்ல முடியுமாக இருந்தால், நான் எனது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வேன். எஸ்.பி.திஸாநாயக்க என்னை முறைத்து பார்த்துக்கொண்டிருக்கின்றார். வென்ட மெண்டேலா தற்போது அணையும் தீபம். எதிர்காலத்தில் ஃபியுஸூம் போய்விடும் என ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.