நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை வலுப்படுத்தியுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கட்சி செய்த பாவத்தை கழுவிக்கொள்ளும் நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது. அரசாங்கத்தை தோற்கடிக்கும் திட்டங்கள் மக்கள் விடுதலை முன்னணியிடம் இருக்கவில்லை.
அரசாங்கத்தை தோற்கடிக்கும் திட்டத்திலேயே தமது கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தாக மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டை மாற்றிக்கொண்டதன் காரணமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் அரசாங்கத்தை வலுப்படுத்தும் திட்டம் மக்கள் விடுதலை முன்னணியிடம் இருந்ததாக சிலர் கூறிவருவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.