இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த 9 இளைஞர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற அரசியல் புரட்சியின் பின்னர் தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு இளைஞர்களை அரச வேலைக்கு அமர்த்தும் சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் குறித்த விடயத்தினை நிறுத்துமாறு கோரப்பட்டது.
மத்திய அரசின் அமைச்சர்களிடம் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறிது காலம் தென்னிலங்கையிலிருந்து இளைஞர்கள் வடக்கிற்கு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு ஒன்பது இளைஞர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் முகாமைத்துவ உதவியாளர்களாக ஆறுபேரும் சாரதியாக மூன்று பேருமாக ஒன்பது சிங்கள் இளைஞர்கள் வடக்கிற்கு நியமனம் பெற்று வந்துள்ளார்கள்.
வடக்கில் பல இளைஞர் யுவதிகள் வேலையில்லாத நிலையில் மத்திய அரசானது தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் வழங்குவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.