வவுனியா விவசாய பண்ணையில் இடம்பெற்ற மோசடிகள்! கணக்காய்வு அதிகாரிகளின் அவதானிப்பில் சிக்கியது

Report Print Theesan in அரசியல்

வவுனியா விவசாய பண்ணையில் 2016 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக உள்ளக கணக்காய்வு அவதானிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

வவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவ் விபரங்கள் தெரியவந்துள்ளது.

இதன் பிரகாரம் நெல் உற்பத்தியில் வவுனியா மாவட்ட செயலகத்தினால் வவுனியா விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர்களால் வழங்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட பருவகால முன்னேற்ற அறிக்கையின் படி வவுனியா குளத்தின் கீழுள்ள நெற் காணிகளின் சராசரி நியம உற்பத்திகளுக்கும் பண்ணையின் உற்பத்தி படிவேட்டில் சராசரி நியம உற்பத்தியிலும் பார்க்க குறைவாகவே காட்டப்பட்டு வந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தொழில்நுட்ப அறிவு குறைந்த விவசாயிகளின் வயல் நிலங்களில் கிடைத்த உற்பத்தியைவிட சகல வளங்களையும் கொண்ட விவசாய பண்ணையில் பெறப்பட்ட அறுவடை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் மாகாண உள்ளக கணக்காய்வாளரின் அவதானிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய விவசாய திணைக்கள தகவலின் பிரகாரம் அறுவடை செய்யப்பட்ட ஈர உற்பத்தி நிறைக்கும் உலர்ந்த பின்னரான உற்பத்தியின் நிறைக்கும் இடையில் தொழில்நுட்ப ரீதியாக 13 தொடக்கம் 15 வீத நிறை குறைவே காணப்பட்ட வேண்டும் என்ற நியமம் காணப்படுகின்ற போதிலும் இதற்கு முரணான அதிக நிறை வேறுபாடு உற்பத்தி பதிவேட்டிற்கு எடுக்கப்பட்டுள்ளதால் 1226614 .92 ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் நெல் அறுவடை செய்யப்பட்ட திகதியில் இருந்து பல நாட்களின் பின்னரே நெல் உற்பத்தி உற்பத்தி பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது எனவும் உள்ளக கணக்காய்வாளரின் அவதானிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 31.05.2018 இல் களஞ்சியத்தில் உள்ள உற்பத்தி பதிவேட்டின் பிரகாரம் நெல்லின் அளவிற்கும், உண்மை அளவிற்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான செயற்பாடுகள் மோசடிக்கான வாய்ப்புக்கள் அதிகமாக இடம்பெற சந்தர்ப்பமாக அமைந்துள்ளது எனவும் அவதானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண உள்ளக கணக்காய்வாளரின் 01.08.2018 ஆம் திகதியிடப்பட்ட வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையின் கணக்காய்வு அவதானிப்புக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அவதானிப்புகளுக்கு தற்போதைய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானுவினால் வழங்கப்பட்ட பதிலின் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் பணியாற்றிய பண்ணை முகாமையாளரினால் நெல் உற்பத்திக்கான வீழ்ச்சி உரிய காலப்பகுதிகளில் பதிவேடுகளிற்கு எடுக்காமை, ஈர உற்பத்தியின் நிறைக்கும் உலர்ந்த பின்னரான உற்பத்தி நிறைக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளகூடியனவாக காணப்படாமையினால் இவ்விடயம் தொடர்பாக 10.09.2018 ஆம் திகதி மாகாண விவசாய பணிப்பாளருக்கு கடிதம் மூலம் முன்னளிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளமையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குறித்த மோசடிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வட மாகாண விவசாய பணிப்பாளருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரப்பட்டுள்ளது.