யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினருடன் றிசாட் இரகசிய வர்த்தக நடவடிக்கை

Report Print Sumi in அரசியல்

சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வியாபார நடவடிக்கைகளை இரகசியமாக முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறிய தகப்பனும், பிரபல வர்த்தகருமான ராஜன் என்று அழைக்கப்படும் வின்சன் ராயன் என்பவருடனேயே றிசாட் பதியுதீன் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அவரின் பெயரில் தான் வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. றிசாட் பதியுதீனுடன் நெருங்கியவர் தான் இந்த ராஜன். அவரின் பதிவில் தான் இந்த வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர்,

சதோச நிறுவனம் ஊடாக 1236 மில்லியன் ரூபாய் ராஜனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தவணைக் கட்டணம் ஊடாக அதனை செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் 236 மில்லியன் ரூபாய்களை கடந்த நான்கரை வருடங்களாக ராஜன் என்பவர் செலுத்தவில்லை.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அமைச்சர் றிசாட் தலையிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லை.

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு இந்த ராஜன் சொந்தமா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. அவ்வாறு இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களது உறவுமுறை தொடர்பில் தெரியாத காரணத்தினால் என்னால் சொல்ல முடியாது.

இது போன்று றிசாட் நிர்வகிக்கும் தொலைக்காட்சி அலைவரிசையும் அவரின் பெயரில் இல்லை. அது வேறு பெயரில் உள்ளது. எனவே உறவுமுறை தொடர்பில் எனக்கு தெரியாது. ஆயினும் அமைச்சர் றிசாட் பதியுதீன் எந்தவித பிணையும் இன்றி இந்த ராஜன் என்பவருக்கு இந்த பெருந்தொகை பணத்தினை வழங்கியிருக்கின்றார்.

இந்த முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவில் நாம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.