மின்சாரம் தடைப்படுகிறது பரீட்சை வரப்போகிறது போலும்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
90Shares

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் உண்டு.

சில சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக சில அறிகுறிகள் தெரியும் என்ற பொருளை இப்பழமொழி நமக்கு உணர்த்தி நிற்கிறது.

மேகம் கறுப்பதும் மின்னல் முழக்கமும் மழை வருவதற்கான அறிகுறி என்பதுபோல கொள்ளலாம். இது இயற்கைக்குரியது.

செயற்கை வழி முன்னறிகுறிகளும் உண்டு. ஐஸ்பழ விற்பனை வாகனம் வருவதை உணர்த்தும் ஒலிபெருக்கிப் பாடல். நோயாளர் காவு வண்டி வருவதை உணர்த்தும் ஒலி என்பன செயற்கையான முன்னறிகுறி ஏற்பாடுகள்.

இப்படியான ஏற்பாடுகள் ஒன்றைப் பற்றியே இங்கு கூறப்போகின்றோம். அதற்கு முன்னதாக, ஸிலுறூ (எல்.கே.ஜி) என்ற திரைப்படம் அரசியல்வாதிகளின் திருகுதாளத்தை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்ற படம்.

மிக எளிமையாகத் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடிக்கின்றார்.

பின்தங்கிய அரசியல்வாதியாக நடிக்கின்ற அவர் உறங்கும்போதுகூட, அரசியல் நினைப்பும் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தின் தாக்கமும் தூக்கத்தில் அவரைப் பேச வைக்கிறது.

அவரருகில் சிறுபையனான அவரது மகன் உறங்குகிறான். தந்தையின் தூக்கக் குழப்பத்திலும் அரசியல் புலம்பலிலும் அவன் பயந்து போகிறான்.

நாம் கூறுகின்ற ஸிலுறூ படத்தைப் பார்த்தவர்கள் நாம் கூறிய கதைப்பகுதியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

தந்தை ஒருவர் உறங்குகிறார். அவருக்கு அருகில் அவரது மகன். நடுநிசி நேரம் மின்சாரம் தடைப்படுகிறது. காற்றாடிகள் சுற்றவில்லை.

இயற்கைக் காற்றும் குறைந்து விட்டது. நுளம்புத் தொல்லை. இவற்றின் தொந்தரவால் விழித்துக் கொண்ட அந்தச் சிறுவன் அப்பா... அப்பா... கரண்ட் கட்டாகிவிட்டது என்று சொல்லுகிறான்.

தந்தை நித்திரைச் சோம்பலில் கரண்ட் கட்டா! அப்ப பரீட்சை வரப்போகிறது. நீ பேசாமல் உறங்கு என்று கூறிவிட்டு நித்திரையாகிவிட்டார்.

மறுநாள் அந்தப் பையன் பாடசாலைக்குச் செல்கிறான். ஏதோ சொல்லி வைத்தது போல தமிழ் ஆசிரியர் யானை வரும் பின்னே மணி யோசை வரும் முன்னே என்று கூறி பழமொழி என்ற பகுதியைக் கற்பிக்கிறார்.

தனது கற்பித்தலை இடைநிறுத்தி, மாணவர்களே! இந்தப் பழமொழியை உணர்த்தும் உதாரணங்கள் சில கூறுங்கள் என்கிறார்.

அதோ! அந்த மாணவன்; பரீட்சை வரும் பின்னே மின்சாரம் தடைப்படும் முன்னே என்றான்.

ஆசிரியர் நல்ல பதில் என்று பாராட்டினார். ஏனைய மாணவர்கள் சேர் விளங்கவில்லை என்றனர்.

மாணவர்களே! க.பொ.த.உயர்தரப் பரீட்சையும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையும் இன்னும் இருபது நாட்களுக்குள் வரப்போகிறது.

அவ்வாறு பரீட்சைகள் வரும்போது மின் தடையை ஏற்படுத்தி, மாணவர்களின் பெறுபேற்றில் வீழ்ச்சியைச் செய்கின்ற சதிவேலை கடந்த சில வருடங்களாக வடக்கில் நடக்கிறது.

இப்போதும் மின்சாரம் தடைப்படுகிறது. பரீட்சை வரப்போகிறதல்லவா அதுதான்.

- Valampuri