அமெரிக்க - இலங்கை உடன்படிக்கை: உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்கா மற்றும் இலங்கை இடையில் கையெழுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள உடன்படிக்கை சம்பந்தமான அவதானத்துடன் இருந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

குறிப்பாக தென்கிழக்காசியாவின் அயல் நாடான இலங்கையில், அமெரிக்காவின் இராணுவ முகாம் ஒன்றை ஏற்படுத்த இயலுமா என்பது குறித்து இந்தியா கவனம் செலுத்தி வருவதாக எக்கனோமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக இலங்கையில் காணப்படும் எதிர்ப்பு குறித்து இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கு மத்தியில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ இலங்கைக்கான தனது விஜயத்தை இரத்துச் செய்துள்ளார்.

எது எப்படி இருப்பினும் இந்த விடயம் சம்பந்தமான இலங்கையின் தீர்மானத்தை இந்தியா மதிக்கின்றது.

எனினும் அயல் நாடாக மட்டுமின்றி, இந்தியாவுக்கு பூகோளவியல் ரீதியாக முக்கியமான இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் சம்பந்தமாக இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராணுவத்திற்கு இலங்கைக்குள் வரையறையற்ற அனுமதி மட்டுமல்லாது, ராஜதந்திர சிறப்புரிமைகளை வழங்கும் சோபா உடன்படிக்கைக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உடன்படிக்கையில் இன்னும் கையெழுத்திடவில்லை எனவும் உடன்படிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Latest Offers