தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் பங்கேற்பு செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்

Report Print Rusath in அரசியல்

எப்படிப்பட்ட ஜனாதிபதி தங்களுக்கு தேவை என்பதை மட்டக்களப்பு மக்கள் தீர்மானிக்கக் கூடிய தார்மீக கடமை உள்ளதாக தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் பங்கேற்பு செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பவ்ரல் நிறுவனத்தின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளனர்.

இது விடயமான திட்டமிடல் பங்கேற்புக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற தேர்தலுக்கான திட்டமிடல் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் பிரதிநிதிகள், சர்வமத சமாதான அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த சுமார் 30 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் மாகாணப் பணிப்பாளர் ஏ. சொர்ணலிங்கம் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு இடம்பெற கூடிய தேர்தல்களுக்கான திட்டமிடல் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் உள்வாங்கி நிகழ்வை நெறிப்படுத்தினார்.

இதன்போது, நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடிய ஒருவரை அடுத்துவரும் ஜனாதிபதியாக தென்பகுதி மக்கள் முன்மொழிகின்ற அதேவேளை மட்டக்களப்பு மக்கள் இனவேறுபாடுகளுக்கப்பால் எவ்வாறான விழுமியங்களை கொண்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதற்கான கலந்துரையாடல் தளத்தை ஏற்படுத்துவது, சிறுபான்மையினருக்கான ஜனாதிபதியாகவோ அல்லது பெரும்பான்மையினருக்கான ஜனாதிபதியாகவோ என்றில்லாமல் ஒட்டுமொத்த நாட்டு பிரஜைகளுக்குமான ஜனாதிபதி எவ்வாறான விழுமியங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் வேண்டும், அதேபோல இதேவிடயத்தை கிழக்கு மாகாணத்துக்கு வர இருக்கின்ற முதலமைச்சர் எவ்வாறான விழுமியங்ககை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதையும் முன்மொழிய வேண்டும்.

அதற்கேற்றபடியாக அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் தூய அரசியலுக்கான செயற்பாட்டின் ஓரம்சமாக எதிர்வருகின்ற தேர்தல்களில் இளைஞர்கள் உள்வாங்கப்படுதல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுத்தல், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையை ஒரு மாதிரி மாநகர சபையாக உருவாக்குதல் ஆகிய செயற்பாட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் பவ்ரல் நிறுவனத்தின் தலைவர் றோஹன ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணைய மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி பிரசன்யா, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவர் ஷிராணி தேவகுமார் உட்பட இன்னும் பல ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers