மகிந்த ராஜபக்ச விரும்பும் விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமாயின் அதனை தான் மிகவும் விரும்புவதாகவும், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமாயின், எந்த தயக்கமும் இன்றி நாட்டை நேசிக்க கூடிய நபரை வேட்பாளராக நிறுத்த தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற வியத்கம மாநாட்டில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றது என்பதை நாம் அறிவோம். தற்போது தான் இவர்களுக்கு உயிர் வந்துள்ளது. அவசர அவசரமாக உடன்படிக்கைகளில் கையெழுத்திடுகின்றனர்.

கொள்கை சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சமர்பிக்கின்றனர். இந்த நான்கு ஆண்டுகளில் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டனரே தவிர, வேறு எதனையும் செய்யவில்லை.

நாங்கள் கடன் பெற்றோம், அந்த கடனுக்கு பெறுமதியை சேர்த்தோம். எனது அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அரச உயர் அதிகாரிக்கு தண்டனை வழங்கி, அவரிடம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமா?.

எமது ஆட்சியில் அரச அதிகாரிகள் அச்சமின்றி கடமையாற்றினர். நாங்கள் அவர்களை காப்பாற்றோம் என அவர்கள் அறிந்திருந்தனர்.

மரண தண்டனை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் மோதிக்கொள்ளும் போது, நாட்டின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அது பாதிக்கும்.

இந்த நிலைமை காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. என்னை தோற்கடிக்க இருவரும் இணைந்தனர். எனினும் செல்ல போகும் பயணம் குறித்து இருவருக்கும் புரிதல் இருக்கவில்லை.

என்னை தோற்கடிக்கும் ஒரே புரிதல் மட்டுமே இருவருக்கும் இருந்தது. இந்த அரசாங்கத்தை விரைவாக வீட்டுக்கு அனுப்பி விட்டு, நாட்டில் மக்கள் சார்பான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.