ரணிலிடம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் பணத்தைப் பெற்று அபிவிருத்திகளை செய்வோம்: சிவமோகன்

Report Print Theesan in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் இருந்து பெற்று அபிவிருத்திகளை நாம் மேற்கொள்வோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழர்களிற்கான தீர்வானது இன்னும் மூன்று வருடத்தின் பின்னரே கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

1948ஆம் ஆண்டில் இருந்து எத்தனையோ அரசியல் தலைவர்கள் இதே வசனத்தை பேசியிருக்கிறார்கள்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க என்ன நோக்கத்தில் அவ்வாறு கூறினர் என்று எனக்கு தெரியாது. என்னைப்பொறுத்த வரையில் தமிழர்களிற்கான தீர்வு கிடைத்திருக்க வேண்டுமாயின் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாங்களாகவே தங்களது ஆயுதங்களை மௌனித்த பின் தமிழர்களிற்கான ஒரு தீர்வை நோக்கி சிங்கள தேசம் சென்றிருக்க வேண்டும்.

அதிலிருந்து முற்றுமுழுதாக மகிந்த ராஜபக்ச விலகிவிட்டார். அதன் பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேனவும் தமிழர்களின் வாக்குகளில் ஜனாதிபதி ஆனவர். அவரும் கொடுத்த வாக்கில் இருந்து முற்று முழுதாக விலகிவிட்டார்.

எனவே அந்த அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவின் வார்த்தைகள் கூட நம்பிக்கைக்குரியவை அல்ல. எங்களை பொறுத்தவரை பேயா பிசாசா என்ற தீர்மானமே எங்களிடம் இருந்தது.

எனவே ஒரு பிசாசு வரக்கூடாது என்றால் ஒரு பேயை ஆதரிக்க வேண்டிய தேவை இருந்ததால் இந்த அரசை ஆதரித்திருக்கிறோம்.

எமது தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை அவிழ்த்துவிட்டதுடன் எமது மக்களையும் சரணடைந்தவர்களையும் படுகொலை செய்தனர்.

இதற்கு காரணமாக இருந்தவர்கள் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதற்காக இன்னும் பல விடயங்களையும் இவ்வாறு செய்வோம்.

நாங்கள் பணத்திற்காக ஆதரிக்கவில்லை ஊடகங்கள் முன்பு கூறியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று.

இன்று 595 மில்லியனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்து செய்த போது என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை இப்போது நிறுத்தி விட்டு பணத்திற்காக செய்கின்றீர்கள் என கூறுகின்றீர்கள்.

இது மக்களிற்கான பணம் எமது வரிப்பணம் நாங்கள் எடுப்போம் அதை மக்களிற்காக செலவளிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers