செவிடன் காதில் ஊதிய சங்கு' ஆக மாகாண சபைத் தேர்தல் விவகாரம்: முன்னாள் முதல்வர் சாடல்

Report Print Rakesh in அரசியல்

"ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்தலாம். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தி வருகின்றார். எனினும், அவரது கூற்று செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"வார வாரம் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்துவரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மைய பத்திரிகை ஆசிரியர்களின் சந்திப்பின்போது ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தாம் தயாராக இருப்பதாகவும், இதனால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

2015ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு வருகின்றது. எனினும், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இதனை நடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், எல்லை மீள்நிர்ணயக் குழுவின் அறிக்கை

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் இழுபறி நிலை காணப்பட்டுப் பின்னர் கொண்டுவரப்பட்ட போதும் அது தோல்வியைத் தழுவியது.

இந்தநிலையில் மீளாய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த அறிக்கை ஆராயப்பட்டது. எனினும், எதுவும் நடக்கவில்லை.

இந்தநிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பதவியேற்றதை அடுத்து மாகாண சபைத் தேர்தல்களைப் பழைய முறையில் நடத்துவது என அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது நாடாளுமன்றத்துக்கு வந்து நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் இழுபறி நிலையே ஏற்பட்டது.

தற்போதுகூட இந்தப் பத்திரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் இந்தத் தேர்தலை இதுவரையில் நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் தட்டிக்கழிப்புகளையே கைக்கொண்டு வருகின்றார். இதற்குப் பிரதான காரணம் தோல்விப் பயம் என நாம் கருதலாம்.

தற்போதைய நிலையில் இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் பிரதமரை நேரில் கண்டு மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டபோது, கட்சித் தலைவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என மஹிந்த தேசப்பிரிய பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் மேலும் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தானதும் பிரதமரின் நழுவல் போக்கையே எடுத்துக்காட்டுகின்றது.

எனவே, மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்தும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; இல்லையேல் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை நான் துறப்பேன் என அறிவித்திருக்கும் மஹிந்த தேப்பிரியவின் கருத்தைக் கவனத்தில் கொண்டும் அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றுள்ளது.

Latest Offers