ஐ.நாவிடம் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார ராஜாங்க அமைச்சர் டொக்டர் அன்ட்றூ மொரிசன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றிற்கு வழங்கிய எழுத்து மூல பதிலொன்றிலேயே மேற்கூறப்பட்ட விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும்.

உண்மையை கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியனவற்றுக்கான மிகச் சிறந்த வழிமுறை இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவது என்பது பிரித்தானியாவின் திடமான நம்பிக்கை.

இந்த விடயம் தொடர்பில் பிரித்தானியா பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் அமைச்சர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றது.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை எடுத்துள்ள சில நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது.

எனினும், இன்னும் பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

அரசியல் அமைப்பு மாற்றத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு, காலமாறு நீதிப் பொறிமுறைமையை நிலைநாட்டுதல் போன்றன குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உரிய சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த விடயங்களை அமைச்சர் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.