சாட்சியங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வது பற்றி பிரதமருடன் பேசிய முஸ்லிம் எம்.பிக்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு சாட்சியங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் திருமணச் சட்டம் உட்பட புதிய திருத்தங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், சாட்சியங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து பொலிஸார் எடுக்க வேண்டும்.

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சில பெண்கள் ஊடகங்களில் வந்து பல விடயங்களை கூறுகின்றனர். அது சட்டத்தின் பிரச்சினையல்ல.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தியில்லை எனில், அது தொடர்பாக மேன்முறையீடு செய்ய முடியும். காதி நீதிமன்றத்தை விமர்சிப்பது தீர்வாக அமையாது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.