ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை அடுத்தடுத்து நடத்தி விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இரண்டு தரப்பினரும் இணைந்தே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பொருத்தமான நபர் மகிந்த ராஜபக்ச எனவும் அவர் யாரை தெரிவு செய்கிறார் என்பதை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிப்பதாக அவர் கூறியுள்ளதாகவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கட்சிகளும் இணைவதால், பயனில்லை என சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். எனினும் இரண்டு கட்சிகள் இணைவதன் முக்கியத்துவம் என்ன என்பது மகிந்த ராஜபக்சவுக்கு தெரியும்.
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மட்டுமே இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதித் தேர்தல் பற்றி பேசப்படவில்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.