ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை நாடாளுமன்ற தெரிவுக்குழு விடுதலை செய்யலாம்! சர்ச்சையை ஏற்படுத்திய காஞ்சன விஜேசேகர

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, குற்றவாளிகளை விடுதலை செய்து, சுத்தப்படுத்தும் அரசியல் தேவையின் அடிப்படையில் தயாரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்படும் என ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் இன்னும் முடியாத நிலைமையில், தெரிவுக்குழுவின் அறிக்கையை வெளியிடுவது சந்தேகத்திற்குரியது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் மோசடிக்கான பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தி விட்டு, அரசாங்கம் கைகளை கழுவியது போல், ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தி விட்டு, குற்றம் சுமத்தப்படும் அமைச்சர்களை விடுதலை செய்து, மீண்டும் தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் முயற்சித்து வருகிறதோ என சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பின் தேர்தல் சட்டங்களுக்கு அமைய அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த இன்னும் 128 நாட்களே இருக்கின்றன.

தேர்தல் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட தினத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும். சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அல்லது டிசம்பர் 9 ஆம் திகதி ஆகிய திகதிகளில் தேர்தலை நடத்தலாம். நவம்பர் மாதத்தின் இறுதி சனிக்கிழமை 23 ஆம் திகதி வருகிறது. பரீட்சைகள் திணைக்களம் சாதாரணப் பரீட்சைக்கான நேரடிப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

சாதாரணப் பரீட்சை நடைபெறுவதற்கு குறைந்தது இரண்டு மூன்று தினங்களுக்கு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவோரும் விடுவிக்கப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலுக்காக கூட்டணியை ஏற்படுத்தி வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸூம் அதற்கான சகல பணிகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் கீழ், முதலாவது ஆண்டு தேசிய மாநாட்டை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி எமது கட்சியின் முதலாவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. பொதுஜன பெரமுனவின் மாநாட்டை முழு நாடும் எதிர்பார்த்துள்ளது. முதலாவதாக பொதுஜன பெரமுனவின் தலைமை பதவி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும்.

இரண்டாவதாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான எமது விரிவான கூட்டணியின் கீழ் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

சகல இனத்தவர்களும் சமமாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடிய, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கக் கூடிய, நேரடியான தலைமைத்துவத்தை உருவாக்குவதே எமது ஒரே நோக்கம். அது மக்களின் நோக்கம் என்பதும் தற்போது தெளிவாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முகாமில் இருக்கும் சகலரையும் ஒன்றாக இணைத்துக்கொள்ள இது உதவியாக இருக்கும் என நாங்கள் எண்ணினோம்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியினை எதிர்க்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் இவர்கள், மகிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பம் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது குற்றங்களை சுமத்தினர். இவர்களில் சிலர் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பின் போது நழுவிச் சென்றனர்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருந்து வருகின்றது. நாடாளுமன்றத்திலும், உள்ளூராட்சி சபைகளிலும் பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவான உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதனால், நாட்டின் பிரதான அரசியல் கட்சி பொதுஜன பெரமுன என்பதில் எந்த விவாதங்களும் இல்லை. இதனால், அமைக்கப்படும் கூட்டணியிலும் பிரதான தரப்பாக பொதுஜன பெரமுனவே இருக்கும் எனவும் காஞ்சன் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.