நாமல் வெளிநாடு செல்ல தடையை நீக்கியது நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக்கொண்டு தவறாக வழியில் சம்பாதித்த 15 மில்லியன் ரூபாய் பணத்தை ஹேலோகோப் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும் நாமல் ராஜபக்ச உட்பட நான்கு சந்தேக நபர்கள் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், வெளிநாட்டுப் பயண தடையை ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைகளை நிறைவு செய்து, சகல அறிக்கைகளும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.