மருத்துவர் ஷாபி சத்திர சிகிச்சை செய்ததாக கூறும் எந்த பெண்ணும் மருத்துவப் பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு

Report Print Steephen Steephen in அரசியல்

மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி மீது குற்றம் சுமத்தியுள்ள தாய்மாரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை மற்றும் சொய்சா பெண்கள் வைத்தியசாலை ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த தாய்மாரும் பரிசோதனைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவப் பரிசோதனைக்கு நீண்ட நேரம் செல்லும் எனவும் பரிசோதனைக்கு வைத்தியசாலைகளில் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பரிசோதனைக்கு எவரும் வரவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

இந்த நிலையில், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் தாய்மார் சார்பில், இன்று செய்தியாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைக்கு செல்லாதமைக்கான காரணம் தெளிவுப்படுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பக்கசார்பாக இருப்பதாகவும் இந்த பரிசோதனைகளில் மருத்துவர் ஷாபிக்கு நியாயம் கிடைக்கலாம் என மக்கள் சந்தேகிப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன, SHG பரிசோதனையில் பெலோப்பியன் குழாய்களுக்கு பாதிப்பில்லை என ஒப்புவிக்கப்படும் என்பதால், தமது தரப்பு அதனை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இது சாதாரண எக்ஸ்ரே கதிரை விட 50 மடங்கு பலமானது. புற்றுநோய் ஏற்படக் கூடும் என்பதுடன் கரு முட்டைகளுக்கும் சேதம் ஏற்படலாம். தாய்மாருக்கு இந்த மருத்துவப் பரிசோதனை மிகவும் ஆபத்தானது எனவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மருத்துவர் ஷாபி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்பது இந்த மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படும் என்பதால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட குற்றம் சுமத்தும் தரப்பினர், திட்டமிட்டு, தாய்மாரை இந்த பரிசோதனையை செய்துகொள்வதை தடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இதுவரை தாம் மேற்கொண்டு வந்த பிரசாரம் புஷ்வாணமாகி விடும் என்பதால், பரிசோதனை நடவடிக்கைகளை திட்டமிட்டு தடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.