யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி! இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு இதுதான்

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதி வழங்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் அமெரிக்கா முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் கருத்தையும் அவர் முற்றாக மறுத்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கை மக்களே, தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இன்னும் சில மாதங்களில் அடுத்த அரசாங்கத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மக்களின் விருப்பத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது.

அடுத்து எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது. ஒரு வலுவான, இறைமை கொண்ட, சுதந்திரமான இலங்கையை அமெரிக்கா ஆதரிக்கிறது.

இந்தோ-பசிபிக் பாதுகாப்பில் இலங்கையில் பங்களிப்பையும் மதிக்கிறது. இலங்கை இந்த விடயத்தில் இன்னும் திறமையாக இருக்க உதவுவதற்காகவே, “ வருகை படைகள் உடன்பாடு ” குறித்த பேச்சுக்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது.

“ வருகை படைகள் உடன்பாடு” என்பது ஒரு நிர்வாக உடன்பாடு ஆகும். இது நுழைவு - வெளியேறும் தேவைகள், தொழில்முறை உரிமங்களை அங்கீகரித்தல் மற்றும் பெறப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை தரப்படுத்துகிறது.

தற்போது ஒவ்வொரு பயிற்சி, கப்பல் வருகை அல்லது பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிகழ்வுக்கும் முன்னர் இந்த பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

இதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளை எமது நாடுகள் எவ்வாறு தீர்க்க விரும்புகின்றன என்பதை முன்கூட்டியே ஒப்புக் கொள்ள முடிந்தால், நாங்கள் மற்ற பணிகளுக்கு அந்த நேரத்தை செலவிட முடியும்.

சீனாவுக்கும் வருகைப் படைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது இலங்கையுடனான நீண்டகால இருதரப்பு கூட்டு பற்றியது. ஒரு குறிப்பிட்ட சட்டத்தை குறிப்பிட்ட சூழ்நிலைகளை கையாளுவது தொடர்பாக பல நாடுகளில் உடன்பாடுகள் உள்ளன.

உதாரணமாக, வெளிநாடுகளில் இலங்கை படையினர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது, அவர்கள் இலங்கைக்கே அனுப்பப்பட்டனர்.

இலங்கை சட்டத்தின் கீழேயே விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை” என அவர் மேலும் கூறியுள்ளார்.