ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சியின் நோக்கம் என்ன?

Report Print Rakesh in அரசியல்

கிழக்கு தமிழர் ஒன்றியம் ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சியாக உதயமாகியுள்ளது. இந்தக் கட்சியின் நோக்கம் என்னவென்று அதன் தலைவர் கே.சிவநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்கு தமிழர் ஒன்றியம் உருவானபோது அது எதுவித அரசியலிலும் ஈடுபடப் போவதில்லை, இருக்கின்ற கட்சிகளை இணைத்து தமிழ் மக்கள் தேர்தல்களில் அதிகூடிய ஆசனங்களைப் பெறக்கூடிய வகையில் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலுக்கு கொண்டுசெல்வது என்ற முயற்சியுடன்தான் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், இருக்கின்ற கட்சிகள் சுயநலனை முன்னிறுத்திவருவதன் காரணமாக எமக்குச் சாதகமான பதில்களை வழங்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியலை அனைத்து தமிழ் மக்களும் விரும்பவில்லை. கடந்த காலத்தில் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் நலன்கருதிய எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அந்தத் தலைமைகள் மீது தமிழ் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த புத்திஜீவிகளை உள்ளடக்கிய பலமான அரசியல் சக்தியை நாங்கள் உருவாக்காது விட்டால் விரக்தியில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கட்சிகளின் பின்னால் செல்லும் நிலை உருவாகலாம்.

சக்தி வாய்ந்ததொரு அரசியல் தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை கிழக்குத் தமிழர் ஒன்றியத்துக்கு ஏற்பட்டது.

கிழக்கு மாகாண மக்கள் வாக்களிப்பதானால் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சிக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதோடு, தேர்தல் காலங்களில் இருக்கின்ற எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கான முயற்சிகளை கிழக்குத் தமிழர் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவு மேற்கொள்ளும்.

எங்களது தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த எந்த வாய்ப்பையும் தமிழ் மக்கள் சார்பாக பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

இறுதியாக நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போதும்கூட தமிழ் மக்கள் சார்பான எத்தனையோ கோரிக்கைகள் இருந்தும் எதனையும் முன்வைக்காது வெறுமனே மகிந்த ராஜபக்ச வந்துவிடக்கூடாது என்பதற்காக இறைவனின் அனுக்கிரகத்தில் ஏதாவது நடக்கட்டும் எனக்கூறி வாக்களித்ததாக சம்பந்தன் ஐயா கூறியிருந்தார்.

தமிழ் மக்களின் தேவைகள் எதனையுமே கோரிக்கையாக முன்வைக்காது வெறுமனே மகிந்த ராஜபக்ச வந்துவிடுவார் எனக்கூறும் இவர்தானா தமிழ் மக்களின் தலைவர் என்று எண்ணி வெட்கப்படவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனையோ விடயங்களை ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டிருக்கலாம்.

கல்முனை பிரதேசசபைக்கு ஒரு கணக்காளரை நியமிப்பதற்கு ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. தமிழீழத்தில் ஆரம்பித்து நாங்கள் போராட்டம் நடத்தியது கணக்காளர் ஒருவருக்குத்தானா என நான் கேட்கின்றேன்.

உண்மையில் இந்தக் கணக்காளரால் கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள உபபிரதேச செயலாளரின் கீழ் செயற்பட முடியுமா? சட்டம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? கணக்காளருக்கான பணிப்புரைகள் ஒரு பிரதேச செயலாளரினால்தான் கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும்வரை கணக்காளர் உபபிரதேச செயலாளரின்கீழ் செயற்பட முடியாது.

உபபிரதேச செயலர் தரமுயர்த்தப்படும்போதுதான் பிரதேச செயலராக வருவார். அந்தப் பிரதேச செயலர்தான் கணக்காளருக்கான பணிப்புரைகளை விடுக்க முடியும். ஒரு கணக்காளரை நியமித்துவிட்டோம், அதற்காகத்தான் வாக்களித்தோம் என்று கூறுவது சரியான கூற்றல்ல.

தமிழ் மக்களின் வேணவாக்களை பூர்த்தி செய்யக் கூடியதும் தமிழ் மக்களின் நலனை பார்க்கக்கூடியதுமான சரியானதொரு அரசியல் தளத்தை தமிழ் மக்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அமைத்துக்கொடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது.

அந்த அடிப்படையில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவான ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி உதயமானது" - என்றார்.