கல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு

Report Print Rakesh in அரசியல்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு காணப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளார்.

கல்முனை விவகாரம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளரை நியமிப்பதற்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்தே கூட்டமைப்பு கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர, இரா.சம்பந்தனைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் நேற்றுமுன்தினம் இரவு அமைச்சர் வஜிர, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, நிதி விவகாரம் மாத்திரமல்லாது எல்லை நிர்ணய விவகாரம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக முழுமையான பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் அனைத்து விடயங்களையும் ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றி முடிப்பதாக அமைச்சர் வஜிர தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லை நிர்ணயம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொண்ட பின்னரே, பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் வஜிர உறுதியளித்துள்ளார்.

Latest Offers