கிழக்கில் உதயமானது தமிழ் மக்கள் கூட்டணி

Report Print Kalaiyarasi Kalaiyarasi in அரசியல்

தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாமாங்கம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள 51/7 இலக்க கட்டிடத் தொகுதியில் இப்பணிமனை திறக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கட்சி தொடர்பான மக்கள் சந்திப்புக்கள், மாதாந்த ஒன்றுகூடல்கள் இப்பணிமணையில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளருமான எஸ்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம், ஊடக உதவியாளர் எம். சதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய இணைப்பு

தமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயம் என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் பல தசாப்தங்களாக நாம் போராடி வருகின்றோம்.

சொல்லொண்ணாத் துன்பங்களையும், துயரங்களையும் தாங்கி மாபெரும் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன, நீதி மறுக்கப்பட்டு சொந்தமண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து வருகின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்து வருகின்றோம்.

ஆரம்பகாலங்களில் முஸ்லிம் சகோதரர்கள் எம்முடன் இணைந்தே போராடினார்கள். என்னுடன் சட்டக் கல்வி பெற்ற அக்கால சட்ட மாணவரான காலஞ்சென்ற மஷர் மௌலானா ஒருகாலத்தில் தந்தை செல்வாவின் வலது கரமாக திகழ்ந்தார்.

நண்பர் அஷ்ரப் கூட தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்தே தமது அரசியல் பணியை ஆரம்பித்தார். இன்று எம்மிடையேயான ஒற்றுமை, புரிந்துணர்வு யாவும் தேய்ந்து வருகின்றதை காண்கின்றேன்.

சுயநலம் எம்மை பிளவுபடுத்தியுள்ளதைக் காண்கின்றேன்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமைமீட்புப் போராட்டம் 2009 மே மாதத்தோடு மௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இந்நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படாமலும், இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ளகாணிகள் விடுவிப்பு, போர் முடிந்து இராணுவத்தினர் வெளியேறுதல் போன்ற பல விடயங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சற்றேனும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

எம்மவரும் அதுபற்றி அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்ற மனோநிலையில் இல்லை. தமது தனிப்பட்ட நன்மைகளையே தமது பதவிகளை வைத்து பெற்று வர எத்தனித்துள்ளார்கள்.

இதன் விளைவாகவே கொள்கையில் உறுதியோடு, இன விடுதலையை முதன்மைப்படுத்தி, நீதியின் வழி நின்று செயலாற்ற தமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயமாகிற்று என குறிப்பிட்டுள்ளார்.