மைத்திரிக்கு எதிராக அரசியல்வாதிகள் அணிதிரளக் காரணம் என்ன? பொது வெளியில் பேசிய ஜனாதிபதி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் நிலவும் குற்றங்களுக்கு எதிராக நான் செயற்படுவதனால் இன்று அரசியல் துறையிலும் சமூகத்திலும் குற்றமிழைத்து வருகின்றவர்கள் எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் மினுவாங்கொடை ரெஜீ ரணதுங்க விஞ்ஞான கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயம் கல்வியாகும், இலவச கல்வியின் காரணமாக இன்று நாட்டில் அனைத்து பிள்ளைகளினதும் கல்வி உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருட காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் குற்றங்களுக்கு எதிராக நான் செயற்படுவதனால் இன்று அரசியல் துறையிலும் சமூகத்திலும் குற்றமிழைத்து வருகின்றவர்கள் எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றார்கள்.

ஊழல், மோசடி, திருட்டு மற்றும் நாட்டினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை சீரழிக்கும் அனைத்து வகையான கடத்தல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனக்கெதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை கைவிடப்பபோவதில்லை.

இதேவேளை, அண்மையில் கடற்படையினரால் கடலில் வைத்து 270 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பரிசோதனை செய்தபோது அந்த நடவடிக்கை வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்திருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான விசேட விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, லசந்த அழகியவன்ன, ருவான் ரணதுங்க, அஜித் பஸ்நாயக்க, ரஞ்சித் சோமவங்ச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர் தினேஷ் சமரதுங்க மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.