அமெரிக்கா வெளியிட்ட பெயர் பட்டியல்! கோத்தபாயவின் முடிவு?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வருடத்தின் மார்ச் 31 வரையான முதல் காலாண்டின் போது அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரி சேவையினால் 13 மே 2019 திகதியிட்டு வெளியிடப்பட்ட ஒரு அறிவித்தலாக அமெரிக்க சமஷ்டிப் பதிவு இணையத்தளத்தில் இந்தப் பட்டியல் காணப்படுகின்றது.

31 மார்ச் 2019 வரையான முதல்காலாண்டில் அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் பெறப்பட்ட தகவலில் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இழந்த ஒவ்வொருவரினதும் பெயர்கள் உள்ளடக்கியதாக இந்தப்பட்டியல் காணப்படுகிறது.

17 ஏப்ரல் 2019 இல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கோத்தபாய ராஜபக்ச அந்நாட்டுப் பிரஜாவுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தாரென்று கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா தாக்கல் செய்த பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போது அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் இல்லை. எனினும் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பிரஜாவுரிமை கைவிட்டவர்களின் பெயர்ப்பட்டியல் வெகுவிரைவில் வெளிவரும் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னுடைய குடியுரிமையை கைவிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே அமெரிக்கா வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் அவரின் பெயர் இணைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் அடுத்த பெயர் பட்டியலிலும் கோத்தபாயவின் பெயர் வெளிவரவில்லை எனில் அவர் தேர்தலில் களமிறங்குவது மிகப் பெரும் சவாலுக்குரியதாக மாறும் என அரசியல் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.