சகோதர இனத்தவர்களின் அச்சத்தை கவனமாக நிவர்த்தி செய்ய வேண்டும்: மனோ கணேசன்

Report Print Kumar in அரசியல்

சகோதர இனத்தவர்களுக்கு எம்மீது இருக்கும் அச்சத்தினை கவனத்தில்கொண்டு கவனமாக அவற்றினை நிவர்த்தி செய்யவேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தொடர்பில் சிங்கள முஸ்லிம்கள் கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்திசெய்தால்தான் நாங்கள் இலங்கையர்களாக முன்னேறிச்செல்லமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான அலுவலகம் இன்று மட்டக்களப்பு தாழங்குடாவில் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோகணேசனினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதான வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் இணைப்பாளராக அமைச்சரின் இணைப்பாளரான கணேசமூர்த்தி கோபிநாத் கடமையாற்றவுள்ளார். இதன் போது அமைச்சர் மனோகணேசன் அலுவலகத்தை வைபவரீதியாக திறந்து வைத்து அலுவலக செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் அலுவலகம் இங்கு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்களின் நலன்கருதி இந்த அலுவலகம் தாழங்குடா பிரதான வீதியில் திறக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சின் சேவைகளைப்பெறுபவர்கள் கொழும்புக்கு சென்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதனால் இந்த அலுவலகம் இங்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர்களான இ.ரவீந்திரன், சக்திகலா ரூப சிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறீகாந், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி, அரச கரும மொழிகள் திணைக்கள ஆணையாளர் சகோஜி பெரேரா உட்பட அமைச்சின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.