எனக்கு முதுகெலும்பு இல்லையா? பதவிக்காலம் முடிந்ததும் ஆட்சியில் நீடிக்கமாட்டேன்! மைத்திரி தடாலடி பதில்

Report Print Kamel Kamel in அரசியல்

தமக்கு முதுகெலும்பு உண்டு எனவும் சிலர் எனக்கு முதுகெலும்பு கிடையாது என வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டுவாப்பிட்டியில் தற்கொலைத்தாக்குதலுக்கு இலக்காகிய தேவாலயம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட் போது கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தையும் நாட்டின் தலைமைகளும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இன்றைய தினம் உரையாற்றியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்.

தாக்குதலின் பின்னர் அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து பொறுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பயங்கரவாத அமைப்பு இலங்கையிலிருந்து அழிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் விமர்சனங்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு கோருகின்றேன்.

பதவிக் காலம் பூர்த்தியானதன் பின்னர் பதவியில் நீடிக்க மாட்டேன், தேவையென்றால் தேர்தலுக்குச் செல்வேன்.

அனைத்து மதங்களையும் மதத் தலைவர்களையும் வணங்குகின்றேன், மதிக்கின்றேன். ஏதேனும் பிரச்சினை இருந்தால் என்னுடன் பேச முடியும், தேவை என்றால் தொலைக்காட்சியொன்றில் கூட கலந்துரையாடத் தயார்.

எனக்கு முதுகெலும்பு கிடையாது என வெளிக்காட்ட சிலர் முயற்சிக்கின்றனர், எனினும் முதுகெலும்புடைய நேரடித் தலைவர் என்பதனை 2015ம் ஆண்டிலும் அதன் பின்னரும் நிரூபித்துள்ளேன்.

கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு நிறுவயது முதுகெலும்பு இருப்பதனால்தான்.

முதுகெலும்பு உடையவர்கள் ஆங்காங்கே சென்று விமர்சனம் செய்வதனை விடவும், குற்றவாளிகளிடமிருந்தும் ஊழல் மோசடி செய்வோரிடமிருந்தும் நாட்டை பாதுகாக்கும் எனது போராட்டத்திற்கு உதவ வேண்டும்.

விமர்சனங்கள் தேவைதான் என்றாலும் அது அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையிலோ அல்லது மக்களை பிழையாக வழிநடத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.